மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் டி தருமராஜ், கூர்மையான அவதானிப்புகளுக்கும் கருத்துகளுக்கும் அறியப்பட்டவர். யாரும் எதிர்பாராத அளவுக்கு கட்சி ஆரம்பித்த குறுகியகால இடைவெளியில் விஜய் மாபெரும் அரசியல் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு பெரும் ஆதரவு உள்ளது என்பது பற்றி கணித்தவர்களில் பேரா. டி.தருமராஜ் முக்கியமானவர். சமூகப் பண்பாட்டு அசைவுகளின் மீது ஆழ்ந்த கவனம் செலுத்தும் ஆய்வுக் கருத்துகளுக்கு உரியவரான பேராசிரியர் அவர்களிடம் தவெக வெற்றி குறித்து சில அரசியல் கேள்விகளை முன் வைத்தோம்.
மாநிலத்தில் பெரும்பாலான அறிவு ஜீவிகள், சிந்தனையாளர்கள் கணிக்க முடியாத விஜய் அலையை முன்கூட்டியே நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?
இதை விஜய் அலை என்று சொல்வதே தவறு. ஆனால், எல்லா அறிவுஜீவிகளும் அப்படி நினைத்து தான் ஏமாந்து போனார்கள். இது தமிழ்ப் பண்பாட்டில் கடந்த பத்தாண்டுகளாக நிகழ்ந்து வரும் மிக முக்கியமான மாற்றம். அதன் முதல் வெளிப்பாடு, 2017இல் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டம். அந்தப் போராட்டத்தின் போதும் நமது சிந்தனையாளர்கள் மக்களின் எழுச்சி என்று புளகாங்கிதம் அடைந்து தங்களுக்குள் கிளுகிளுத்துக் கொண்டார்கள். நான் அப்பொழுதும் இந்த வகைப் போராட்டம் ‘தலைமையின் வெற்றிடத்தை’ முன்னிட்டு நிகழும் போராட்டம் என்றே எழுதிக் கொண்டிருந்தேன். அப்பொழுதும் எல்லோருக்கும் அது அவமரியாதையாகப் பட்டது. அதைப் புரட்சி என்றே அழைக்க வேண்டும் என்றார்கள். அதன் பின்பு தான் என்னுடைய ஆய்வு ஜல்லிக்கட்டு பற்றி ஆரம்பித்தது. அதன் போக்கில், தமிழ்ச் சமூகத்தில் எப்பொழுதெல்லாம் தலைமையில் வெற்றிடமோ அல்லது அவநம்பிக்கையோ ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் மக்கள் திரள் கிளர்ந்தெழுகிறது என்பதை வரலாற்றுரீதியாக என்னால் நிரூபிக்க முடிந்தது. ‘ஜல்லிக்கட்டு - கிளர்ச்சி எனும் சூழ்ச்சி’ என்ற நூல் முழுக்க முழுக்க அதைப் பற்றியது தான். அந்த நூலை எழுதி முடிக்கும் போது தான் விஜய்யின் அரசியல் பிரவேசம் ஆரம்பித்தது. அவரது அத்தனை அசைவுகளும், ஒரு ஜல்லிகட்டுக் காளையின் பிரவேசத்தைப் போலவே இருந்தது. 2017இல் நடைபெற்ற தலைமையின் வெற்றிடப் போராட்டத்தை நிவர்த்தி செய்வதற்காக வந்தவர் அவர் என்று அப்பொழுதே எனக்குத் தோன்றியது. மக்கள் எதை எதிர்பார்த்திருந்தார்களோ அது நடக்க ஆரம்பித்திருப்பதை என் புத்தகம் வழியாகவும், பிற கட்டுரைகள் மூலமாகவும் கடந்த ஐந்து மாதங்களாக நான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தேன்.
விஜய் தற்போது பெற்றிருக்கும் வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இதை விஜய்யின் சினிமா கவர்ச்சி என்று பலருக்கு தவறாக விளக்கம் சொல்கிறார்கள். இங்கு விஜய் சினிமா நடிகராக இருப்பது ஒரு தகவல் அவ்வளவு தான். அவர், தமிழ்ப் பண்பாட்டில் ஒரு தலைவனுக்கு கற்பிக்கப்பட்ட அத்தனை கவர்ச்சிகளோடு இருந்தார். அதற்கான குணநலன்கள் அவர் மீது தொடர்ச்சியாக ஏற்றப்பட்டன. எனவே இந்த வெற்றி, பண்பாட்டுக் கூறுகளிலிருந்து உருவாகி வந்த வெற்றி. இதை ஒரு குழுவோ அல்லது கட்சியோ திட்டமிட்டிருக்க முடியாது என்பது என் கணிப்பு.
மாநிலம் முழுக்க விஜய் என்ற பெயரைப் பார்த்து மட்டும் மக்கள் வாக்களித்துள்ளனர். தங்கள் தொகுதி வேட்பாளர் யார் என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதைப் பார்க்கிறோம்... இது பற்றி…
தேர்தலே மக்களாட்சி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் தருணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது, மக்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளை சொல்லும் தருணம். வேட்பாளர்கள் தங்கள் பலத்தை சோதித்துக் கொள்ளும் தருணம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் தேர்தல், இத்தகைய மாண்புகளுடன் நடைபெறுவது இல்லை. இங்கே ஒவ்வொரு வேட்பாளருக்கும் சாதி, மதம், பாரம்பரியம், வட்டாரம், மொழி போன்ற சார்புகள் உள்ளன. இவையே அவரது பலமாகக் கருதப்படுவதால் மக்களாட்சியின் மாண்பை நாம் உணர்வதே இல்லை. சாதி, மதம், மொழி, வட்டார குணம் போன்ற அனைத்திற்கும் எதிரானது பண்பாடு என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இங்கே, விஜய் என்ற கதாபாத்திரம் பண்பாட்டிலிருந்து உருவாகி வருவதால், வேட்பாளர்கள் அனைவரும் அவரது சாயலாக மாறிப் போகிறார்கள். எனவே தேர்ந்தெடுக்கப்படும் அனைவரும் விஜய் மட்டுமே, அவர் தனி நபர் அல்ல. பண்பாட்டால் தலைவர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கதாபாத்திரம் அவ்வளவு தான். மக்களாட்சி போன்ற உயரிய விழுமியங்கள் காலப்போக்கில் குறுங்குழு அரசியலுக்குப் பலியாகும் போது பண்பாடு எடுக்கும் எதிர் நடவடிக்கை இது.
பிம்பச் சிறை என்பது தமிழ்நாட்டில் பிரபல கோட்பாடு... ஆனால் இக்கோட்பாட்டில் தங்களை நம்பிய மக்கள் பிம்பத்தால் ஏமாற்றப் படுகிறார்கள் என்பதை நீங்கள் மறுக்கிறீர்கள்... விஜய் என்னும் பிம்பம் இது வரை இருக்கும் பிம்பங்களில் இருந்து எப்படி மாறுபடுகிறது?
பிம்பச்சிறை என்பது காலாவதியான ஒரு கோட்பாடு. அது வெளியே புரட்சிகரமாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் கட்டுப்பெட்டித்தனமானது. அதை நம்ப ஆரம்பிக்கும் போது நீங்கள் உங்களையே புத்திசாலியாக நினைத்துக் கொள்கிற ஆபத்து அதில் இருக்கிறது. அந்த மயக்கத்தைத் தருவதைத் தவிர அது வேறொன்றையும் பெரிதாய் சாதித்து விடவில்லை. பிம்பங்கள் தனி நபர்களாலோ அல்லது மக்கள் என்ற கூட்டத்தாலோ மட்டும் உருவாகி விடுவதில்லை. அது ஒரு கூட்டுத் தயாரிப்பு. ஆங்கிலத்தில் amalgamation என்று சொல்லலாம். பல காரணிகள் சூழ்ந்து உருவாகும் பண்பாடுச் செயல். அது ஒரு இயந்திரத்தைப் போலச் செயல்படுகிறது. பிம்பச்சிறை என்ற காரணி அவ்வியந்திரத்தின் ஒரு சிறு பகுதியாக வேண்டுமானால் இருக்க முடியும். நான் மேலே சொன்னது போல, பண்பாட்டின் வெவ்வேறு காரணிகள் அதற்குக் காரணமாகின்றன. வரலாற்றிலிருந்து ஏராளமான சங்கதிகள் அதில் செயல்பட ஆரம்பிக்கின்றன. சினிமா என்ற சாதனம் உருவாக்கிய ஒரு பிம்பம் அல்ல அது. அதுவொரு சூழ்ச்சி.
பிம்பங்களை மக்கள் திறள் தான் உருவாக்குகிறது என்று நீங்கள் சொல்வது நேரெதிராக உள்ளதே?
மக்கள் திரள் என்ற வார்த்தை இங்கே பல்வேறு அர்த்தங்களை உடையது. அதற்கு, ஏராளமான மனிதர்கள் ஓரிடத்தில் திரள்வது என்று மட்டுமே பொருள் இல்லை. அவர்கள் ஓரிடத்தில் திரள்கிறார்கள் என்றால் அந்த இடம், அதாவது திணையின் பங்களிப்பு அதில் அதிகம். அதே நேரம் அவர்கள் திரள்கிறார்கள் என்றால், அங்கு நிகழும் ஈர்ப்பு எத்தன்மையது என்று நாம் விளக்க வேண்டியிருக்கிறது. விஜய் என்ற நபர் ஓரிடத்தில் தோன்றப் போகிறார் என்றதும், மக்கள் அங்கே திரள்வதற்கு பழக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். இந்தப் பழக்கத்தையே நான் பண்பாடு என்று சொல்கிறேன். வாடிவாசலை விட்டு திமிறிக் கொண்டு வரும் காளையைப் போன்ற வருகையை விஜய் நிகழ்த்தும் போது, அவரைத் தழுவிக் கொள்ள தமிழர்கள் முட்டி மோதுகிறார்கள். ஏறு தழுவுதல்தான் அது.
கொளத்தூர் தொகுதியில் தோற்கடிக்கப்படும் அளவுக்கு ஸ்டாலின் என்ன தவறு செய்தார் என நினைக்கிறீர்கள்?
ஸ்டாலின் என்ன தவறு செய்தார் என்பதற்கு, கொளத்தூர் தொகுதியில் என்ன நடந்தது என்பது பற்றி நாம் முழுக்க விசாரித்த பின்பே வந்து சேர முடியும். அவரது தோல்வி வருந்தத்தக்கது. அவர் போட்டியிட வட மண்டலத்தையும் தென் மண்டலத்தையும் தவிர்த்திருக்க வேண்டும். வடமண்டலத்தில் தான் வேங்கைவயல் வருகிறது; தென்மண்டலத்தில் கவின் கொலை நடந்தது. இந்த மண்டலங்கள் திமுகவிற்கு ஆபத்தானவை.
விசிகவின் தோல்வி எதைக் காட்டுகிறது?
விசிக தன் அரசியல் நிலைப்பாட்டை இழந்து விட்டது என்றே நான் நினைக்கிறேன். அவர்கள் மகாபாரதத்துக் கர்ணனைப் போன்ற மனச்சிக்கலில் மாட்டிக் கொண்டார்கள். நியாயமா அல்லது விசுவாசமா என்ற கேள்விக்கு அவர்கள் அரதப்பழைய விசுவாசம் என்ற பதிலையே எடுத்துக் கொண்டார்கள். இது அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது.
பாஜக அதிமுக கூட்டணியில் நின்றும்கூட பெரும்தோல்விதான்..
பாஜக மீது பெரும் அதிருப்தி வரலாற்றுரீதியாய் தமிழகத்தில் திரண்டிருக்கிறது. இங்கே பிராமண எதிர்ப்பு தான் வெகுஜன அரசியல். இதற்கு நூற்றாண்டுகள் கடந்த வரலாறு இருக்கிறது. அதே போல், இங்கே மத நம்பிக்கை என்பது பகுத்தறிவை இன்னொரு கையில் பற்றிக் கொண்டிருக்கிறது. எனவே பாஜகவின் வட இந்தியத் தந்திரங்கள் தமிழகத்தில் செல்லுபடியாகுவதில்லை.
தவெகவின் கொள்கைகளைப் பார்க்கையில் அது திராவிடக் கட்சிக் கொள்கைகளின் நீட்சியான கட்சி எனத் தோன்றுகிறதா?
தவெகவிற்கு நிலையான, ஆணித்தரமான கொள்கைகள் இருப்பதாய் நான் நம்பவில்லை. அது இனி மேல் தான் அக்கட்சிக்கு திகைந்து வர வேண்டும்.
நாம் தமிழர் கட்சிக்கு உங்கள் ஆலோசனை?
தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் வடிவம் நாம் தமிழர் கட்சி. தனித்தமிழில் பேச வேண்டும் என்பது எல்லோரின் ஆசையும் தான். ஆனால், அது அன்றாட வாழ்க்கைக்கு ஒத்து வருவதில்லை. அன்றாட மொழியில் ஆங்கிலம், சம்ஸ்கிருதம், உருது, தெலுங்கு என்று பல்வேறு மொழிகள் கலந்துள்ளன. அதே போன்றது தான் நாம் தமிழர் கட்சி. எல்லோருக்கும் அவர்கள் பேசுவதன் மீது ஆசை தான். ஆனால், அப்படி வாழ முடியாது என்பது தான் நிஜம்.
விஜய்யை வஞ்சிக்கப்பட்ட வாலிபன் என்று சொல்கிறீர்கள், அது ஏன்?
இந்தப் பாத்திரத்தை உருவாக்கியவர்கள் திமுகவினர் தான். அவர்கள் தங்களை அறிவுடைய கட்சியாக நினைத்துக் கொள்ளும் மடமையை என்றுமே விட்டு விலகுவது இல்லை. உங்களை நீங்களே அறிவுடையவர் என்று எண்ணிக் கொள்ளும் போது எதிராளியை மூடன் என்று தீர்மானித்து விடுகிறீர்கள். மூடனை முன்னேற்றும் கடமை உங்களுக்கே இருப்பதாக நினைத்துக் கொள்கிறீர்கள். மூடன் அறிவாளியாகி விட்டால் உங்களது ‘முன்னேற்றக்’ கட்சிக்கு வேலை இல்லை என்பதும் உங்களுக்கு விளங்குகிறது. இந்த இடத்திலிருந்து நீங்கள் பாசாங்கு செய்ய ஆரம்பிக்கிறீர்கள். சமூகத்தைக் காப்பாற்றும் பெருங்கடமை உங்களுக்கு இருப்பதாய் பசப்ப ஆரம்பிக்கிறீர்கள். இது, உங்களுக்கு எதிரே இருக்கும் ‘மூடனை’ வஞ்சிக்கும் செயல் என்று உங்களுக்குத் தோன்றுவதே இல்லை.
திமுக, அரசியல் கட்சி என்ற நிலையிலிருந்து கார்ப்பரேட்டாக மாறி பல வருடங்கள் ஆகிறது. அதன் 75 வருட வரலாற்றில் அது பல்வேறு துரோகங்களை மறைக்க வேண்டியிருக்கிறது. அதனால், அதன் எல்லா செய்கைகளும் மறைமுக அர்த்தங்களைக் கொண்டதாக மாறி விடுகின்றன. இதையே, திமுகவின் வஞ்சகம் என்று மக்கள் விளங்கிக் கொள்கிறார்கள். மக்கள் எதிர்கொண்ட வஞ்சகத்தின் உதாரண வடிவமாக விஜய் பார்க்கப்பட்டார் என்பது தான் இந்த தேர்தலில் நடைபெற்ற விசித்திரம். அவரைச் சுற்றி நிகழ்ந்த அத்தனையையும் திமுகவின் சதியாகவே மக்கள் விளங்கிக் கொண்டதற்கு திமுகவின் வரலாறு தான் காரணம். திமுக முன்வைத்த அறிவுடமை, ராஜதந்திரம் போன்ற செயல்பாடுகளே அவர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கி விட்டது.